மசிவன் பதிப்பகம்
ஓங்கிப் பிடியும் உயர்ந்த எழுதுகோலை
தாங்கிப் பிடிக்கும் அதன்தோளில் - வாங்கிப்
படியும் மசிவன் பதிப்பக நூலை
நொடியினில் பூக்கும் அறிவு - மசிவன்
எண்ணங்களை எழுத்தாக்க நினைக்கும் எவர்க்கும் ஈன்ற உதவியினைச் செய்வதற்காய் தொடங்கப்பட்ட நிறுவனம். சுயமாய் விதைத்து, ஊன்றி, முட்டி முளைத்து வளர்வது எளிதான செயலன்று. மனித உயிர்கள் நான்கு விதமான அடிப்படைத் திறன்களைத் தனக்குள் கொண்டிருக்கின்றன. புத்தகத்தில் அத்திறன்கள் அனைத்தும் ஒருசேரப் பொருந்தியிருப்பதாக அறிஞர்கள் கருதுகின்றனர். அந்த வகையில் ஆய்வு சார்ந்த கருத்தரங்கம் நடத்துவதும் அதனை நூலாக அச்சிடுவதும் பதிப்பகத்தின் இன்றியமையாப் பணியாகும். அச்சு ஊடகமாக மட்டுமன்றி இணையவழியிலான மின்னூலாகவும் பதிப்புப் பணியை முன்னெடுத்துள்ளோம். எந்தவொரு இலாப நோக்குடன் இயங்காமல் நூலாசிரியர்களின் ஒத்துழைப்புடன் இயங்கி வருகிறது. வாருங்கள்! வாசிப்போம்! நேசிப்போம்! சுவாசிப்போம்.
உலகம் முழுதும் பரவியிருக்கும் தமிழ் கூறும் நல்லுலக மக்கள் அனைவருக்கும் வணக்கம். புலம் மின்னிதழ் ஏப்ரல் 2021 முதல் காலாண்டிதழாக வெளிவருகின்றது. புலம் என்ற சொல்லுக்கு நிலம், நுண்மை, அறிவு எனப் பல பொருண்மைகளை அகராதிகள் முன்வைக்கின்றன. புலம் நிலத்தைக் குறிக்கும் தன்மையாக அமைவதால் அஃது திணையையும் சுட்டுவதாகக் கொள்ளலாம். அறிவு நுண்ணறிவு என்றும் பொருள்படுகிறது. இந்நிலத்தின்கண் அமைந்த நுண்மையான அறிவினை வெளிப்படுத்துகிறது. அவ்வாறெனில் நிலத்தில் நடக்கின்ற அனைத்து நுண்மையான அறிவுசார்ந்த ஆராய்ச்சியை வெளிப்படுத்துவதாகப் புலம் அமைகின்றது. புலம் தமிழ் நிலம் சார்ந்தும் அதன்கண் நிகழும் ஆய்வு சார்ந்தும் இயங்கும் இதழாகும். மாற்றம் ஒன்றே மாறாத் தன்மையுடன் இருப்பதாகத் தத்துவவியலாளர்கள் கூறுகின்றார்கள். ஆனால் இங்கு ஆய்வு சார்ந்த பொருண்மைகள் மட்டுமே மாறும் தன்மையுடனும் ஆய்வு ஆராய்ச்சி என்பது மாறாத் தன்மையுடன் காணப்படுவதை நாம் உணர முடியும். இவ்விதழ் தரமான ஆய்வுக்கட்டுரைகளை மட்டுமே வெளியிடும். இணையவழியிலும் நேரடியாகவும் கருத்தரங்கு மற்றும் பயிலரங்குகளை நடத்துவதும் இதன் இன்றியமையாத பணியாகும். மேலும், கருத்தரங்குகள் வழியே ஆய்வுக்கட்டுரைகளைச் சிறப்புப் பதிப்பாக வெளியிடவும் திட்டமிட்டுள்ளது. சான்றோர்கள் ஆய்வுக் கட்டுரைகளை இதழுக்கு அளித்து தங்களது பங்களிப்பினை நல்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.