மசிவன் பதிப்பகம்

கணினிவிடு தூது

நவீன உலகில் கணினி இன்றி மனிதன் இயங்க முடியாத நிலை உள்ளது. இன்றைய மனிதனோடு இரண்றக் கலந்த கணினியைத் தன் காதலியிடம் தூது விடுப்பதாக இந்நூல் அமைந்துள்ளது. கவித்துவம் நிறைந்த சிவபாலனின் தமிழார்வமும், தமிழின்மீது கொண்டுள்ள ஆராக் காதலும் இந்நூல் முழுவதும் தெள்ளிதின் விளக்குகிறது. கணினியை இந்த உலகிற்குப் படைத்துத் தந்த சார்லச் பாப்யேச் தொடங்கி அதன் வளர்ச்சியைக் கவிதையின் இடையிடையே காட்டியுள்ளார். கணினியால் முடியாத காரியம் எதுவுமில்லை என்பதை,

“உன்னால் இயலும் இயலாத காரியம்

ஒன்றும் உளவோ மொழியும்”

என்று இன்றைய உலகமயமாக்கலில் கணினியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறார்.

தூது சொல்லும் பொருளுக்குத் தைரியத்தை ஊட்டுவதாக

“…………….என்பொருள்

கூறயார்க்கு மஞ்சாதே கூர்வாளைக் கொண்டே

குறுக்கே வருபவரைக் கொல்லும்”

என்ற அடிகள் அமைகின்றன.

கணினியைத் தூது விடுக்கும் கவிஞர் தோழியிடம் சென்று பேசு என்று கூறுவது புதுமையாக உள்ளது. மற்ற தூது இலக்கியங்களில் தூது செல்லும் பொருள் நேரே தலைவியிடம் காதலனின் காதல் மனதைக் கூறுமே தவிர, அவளது தோழியிடம் பேசுவதாக இல்லை. தம்பி சிவபாலன் இப்புதிய போக்கைக் கடைப்பிடித்துள்ளதைப் போற்றத்தான் வேண்டும். தோழிக்குப் பெயர் சூட்ட முடியாது. எனவெ அவளது ஊர்ப்பெயரால் குறிப்பிட்டு அகப்பொருள் மரபை மீறாத தன்மையைக் கணினிவிடு தூதில் காண முடிகிறது. ஆனால் காதலனாகிய தன் பெயரை நூலில் பல இடங்களில் வெளிப்படக் காட்டுகிறார்.

தம்பி சிவபாலனின் சொற்சிலம்பத்தைக் கூறாமல் இருக்கமுடியாது.

“மொழியும் விளக்கம் மொழியா மொழியும்

மொழியே அகவல் மொழியாம்-மொழிவேன்”

என்ற அடிகளில் மொழி என்ற சொல்லின் பயன்பாடு பாராட்டுதற்குறியது. நூலின் இறுதில் தான் கற்ற இலக்கணத்தை - தொல்காப்பியத்தை - அதன்பிரிவுகளைக் கவிதையில் பயன்படுத்தியுள்ளவிதம் மிக்க பாராட்டைப்பெறுகிறது. தான் ஒரு தமிழ் மாணவன் என்பதைக் கவிதையில் பல இடங்களில் நிரூபித்துள்ளார் சிவபாலன்.

ஆய்வுப்பனுவல்

புதிய நெறிமுறை வேண்டும் தமிழ்மொழிக்குப்

பாதை மாறா பதிப்பில் – உதயமாய்

வந்திடும் ஆய்வுப் பனுவல் அறிவுநூல்

ஈந்திடும் ஆய்வை இதற்கு – மசிவன்

ஆய்வு என்பது ஒன்றைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள உதவும் அடிப்படைக் கருவியாகும். உலக அளவில் எல்லாத் துறைகளிலும் ஆய்வுகள் நேர்த்தியாக நடந்த வண்ணம் உள்ளன. எனினும் மனிதனை உயிரோட்டமாக இயங்க வைக்கும் கருவி அல்லது காரணி இலக்கியம் என்றால் அது மிகையாகாது. அவ்வகையில் ஒவ்வொரு மொழியிலும் புதுப்புது ஆய்வுகள் நிகழ்ந்து கொண்டே தான் உள்ளன. எந்த மொழியில் ஆய்வுகள் முகிழ்ந்தாலும் உலக மொழிகளில் மூத்த மொழியான தமிழ் மொழியில் ஆக்கப்பூர்வமான ஆய்வுகள் நிகழ்வது மகிழ்ச்சிக்குரியது.

கடந்த காலங்களில் கொரோனா எனும் பெருந்தொற்றினால் உலகமே தனது இயக்கத்தை இயல்பிலிருந்து மாற்றிக் கொண்டது. போதிய அளவில் ஆய்வுப்பணிகளில் ஆக்கபூர்வமானத் தீர்வுகள் எட்டப்படவில்லை. புத்தகங்கள், ஆய்வுக்கட்டுரைகள் வெளிவராமல் இலக்கிய உலகில் வறட்சி ஏற்பட்டுள்ளது என்றே குறிப்பிடலாம். இத்தகைய வறட்சியான சூழலை மாற்றும் ஒரு முன் முயற்சியாக முகிழ்ந்ததுதான் ஆய்வுப்பனுவல் என்னும் இந்நூல். புதுப்புது களங்களில் சிறந்த ஆய்வுகள் நிகழ்த்தப்பட வேண்டும் என்பதே எங்களின் முதன்மையான நோக்கம். எங்களின் நோக்கத்தை சரியாக உள்வாங்கிக் கொண்ட ஆய்வறிஞர்களின் பல்வேறு களங்களில் உருவான ஆய்வுக்கட்டுரைகள் எவ்விதப் பதிப்புத் தொகையும் பெறாமல் மசிவன் பதிப்பகத்தாரின் மொழிப்பற்றுதலினால் ISBN எண்ணுடன் நூல்வடிவம் பெற்றுள்ளன என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதுபோன்று சீரிய முறையில் ஆய்வுநுட்பம் பிறழாத ஆக்கப்பூர்வமான கட்டுரைகளை எதிர்பார்க்கிறோம். ஆய்வறிஞர்களின் உத்வேகத்தைக் கருத்தில் கொண்டு வருடத்திற்கு இரண்டுமுறை நூலாக்கம் செய்யலாம் எனத் திட்டமிட்டுள்ளோம் என்பதைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.